வலைப்பதிவு · இலங்கை

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு பயணம்!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு பயணம்!

Vijay

· 3 நிமிட வாசிப்பு · 29 நவம்பர் புதுப்பிக்கப்பட்டது

பின்தொடர்
இந்தக் கட்டுரையைக் கேளுங்கள்

வேகம்

குரல்

குறிப்பு: அங்கிருந்து கேட்க எந்தப் பத்தியையும் தொடுங்கள்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு பயணம்!
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு பயணம்!

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஒரு பயணம்!

மாலை நேரம் சுமார் ஐந்து மணி இருக்கும். கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்குப் பயணம் செய்வதற்காக நானும் எனது நண்பர் அனோஜித்தும் புறக்கோட்டை அரச பேருந்து நிலையத்தைச் சென்றடைந்தோம்.

மட்டக்களப்பு பேருந்து எங்கே நிற்கிறது என்று இருவரும் அங்கும் இங்கும் தேடிக்கொண்டிருந்தோம். மறுபுறம் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்காகப் பலரும் பேருந்துகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

இறுதியில், அங்கிருந்த ஒருவரிடம் மட்டக்களப்பு பேருந்து எங்கே நிற்கிறது என்று விசாரித்தோம்.

அவர், "ஆறாம் நம்பர் போட்ட இடத்துக்குப் போங்கோ. அங்கேதான் பேருந்து நிற்கும்" என்றார்.

அவர் கூறிய இடத்தை நோக்கிச் சென்றோம். அங்கே 'அக்கரைப்பற்று – கொழும்பு' என்று எழுத்துப் பொறிக்கப்பட்ட பேருந்து ஒன்று நின்றுகொண்டிருந்தது. உடனே அதில் ஏறிக்கொண்டோம்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் பேருந்து மட்டும் நகர்வதாகத் தெரியவில்லை!

"நேரமாகிறது... பேருந்தை இன்னும் ஏன் எடுக்கவில்லை? எத்தனை மணிக்குத்தான் எடுப்பீர்கள்?" என்று சற்றுச் சத்தமாகவே கேட்டேன்.

அதற்கு நடத்துநர், "இன்னும் கொஞ்ச நேரத்தில் எடுப்போம்" என்றார்.

ஒருவழியாகக் காத்திருந்து, சலிப்படைந்து, சற்று நேரத்திற்குப் பிறகு பேருந்து புறப்பட்டது.

பேருந்து கொஞ்ச தூரம் சென்றுகொண்டிருந்தது. நான் வலப்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போது நண்பர் அனோஜித் என்னைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டான்.

"மச்சான், பேருந்துக்குக் கட்டணம் கொடுக்கக் காசு இருக்கா?"

அவன் கேட்டதும் சட்டைப் பைக்குள் வைத்திருந்த பணத்தை எடுத்துப் பார்த்தேன். பார்த்தபோது, மனதுக்குள் ஒரு சிறிய அதிர்ச்சி! கையில் இருந்த பணம் போதுமானதாக இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.

உடனே நடத்துநரை அழைத்து,

"மட்டக்களப்புக்கு எவ்வளவு கட்டணம்?" என்று கேட்டேன்.

அவர் எந்தத் தயக்கமும் இல்லாமல், "இரண்டாயிரத்து எழுநூறு ரூபாய்" என்றார்.

அவர் சொன்ன தொகையைக் கேட்டதும் அவரது முகத்தைப் பார்த்துச் சிரித்தவாறு, சட்டைப் பையிலிருந்த இரண்டாயிரம் ரூபாயை எடுத்து நீட்டினேன்.

"அண்ணை, இதை வைத்துக்கொள்ளுங்கள். வழியில் எங்கேயாவது ATM இயந்திரம் இருந்தால் சொல்லுங்கோ... இறங்கி எடுத்துத் தருகிறேன்!" என்றேன்.

நடத்துநரின் முகத்தில் என்ன எதிர்வினை இருந்திருக்கும் என்பதைவிட, நண்பர் அனோஜித்தின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான் அப்போது எனக்குப் பெரிய சுவாரஸ்யமாக இருந்தது!

அதன்பிறகு எனது ATM அட்டையை நண்பர் அனோஜித்திடம் கொடுத்து, நடத்துநரிடம் சென்று பேசுமாறு கூறினேன்.

"அண்ணை, வழியில் ஏதாவது ATM இயந்திரம் இருக்கும் இடத்தில் பேருந்தை நிறுத்துங்கள். நான் இறங்கிப் பணத்தை எடுத்துத் தருகிறேன்" என்று கேட்கச் சொன்னேன்.

அனோஜித்தும் நடத்துநரிடம் சென்று கேட்டுவிட்டு என்னிடம் வந்து சொன்னான்.

நடத்துநர் கூறிய பதில் சுவாரஸ்யமானது.

"இல்லை தம்பி, பொலன்னறுவையில் பணத்தை எடுத்துத் தாருங்கள். கலேவல பகுதியில் சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு இடத்தில் பேருந்தை நிறுத்துவோம். அங்கே நீங்கள் சாப்பிடுவதாயிருந்தால் நான் பணம் தருகிறேன். நீங்கள் சாப்பிடுங்கள். பொலன்னறுவை வந்ததும் பணத்தை எடுத்துத் தாருங்கள்" என்று கூறியதாகச் சொன்னான்.

அதைக் கேட்டதும், "சரி" என்று சொல்லிச் சிரித்தேன்.

பேருந்து கடவத்தை, வரக்காபொல, குருணாகல் ஆகிய இடங்களைக் கடந்து கலேவல பகுதியைச் சென்றடைந்தது.

அங்கே ஒரு உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. நானும் முன்பக்கமாகச் சென்று கீழே இறங்கினேன்.

அப்போது பேருந்து ஓட்டுநரும் உணவகத்தில் இறங்கினார். நடத்துநரிடம் சென்று பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதேநேரம், நண்பர் அனோஜித் இடியப்பமும் கறியும் வாங்கிச் சாப்பிடுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தான்.

அந்த நேரத்தில் எனக்குப் பின்னால் இருந்து என்னைப் பார்த்துச் சிரித்தவாறு ஒருவர் வந்துகொண்டிருந்தார்.

அவர் வேறு யாருமல்ல!

என்னுடன் கூடப் பிறவாத சகோதரன், எனது ஆருயிர் நண்பன் சுரேன்!

அவனைக் கண்டதும் எனக்கும் மகிழ்ச்சி. சிரித்தவாறே அவனுடன் உரையாடத் தொடங்கினேன்.

"எங்கே போற மச்சான்?" என்று கேட்டேன்.

அதற்கு அவன், "நான் பேருந்தில் ஓடி வந்தேன்" என்றான்.

"எங்கே மச்சான் போகிறாய்?" என்று அவன் என்னிடம் கேட்டான்.

"மட்டக்களப்புக்குப் போகப்போறேன்" என்றேன்.

நான் ஏதோ தனிப்பட்ட வாகனத்தில் வந்திருப்பதாக அவன் நினைத்துக்கொண்டிருந்தான் போல!

உடனே நான், "நானும் பேருந்தில்தான் வந்தேன் மச்சான்" என்றேன்.

அப்போது அங்கே வெளியே ஒரே ஒரு பேருந்துதான் நின்றுகொண்டிருந்தது.

அதன்பிறகுதான் சுரேன் சொன்னான்:

"அந்தப் பேருந்தில்தான் நானும் ஓடி வந்தேன்!"

அதைக் கேட்டதும் எனக்குள் ஒரே சிரிப்பு!

நான் மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்:

அடடா! எனது நண்பன் சுரேன் ஓடி வந்த அதே பேருந்தில்தான் நானும் பயணம் செய்துகொண்டிருக்கிறேன்!

எதிர்பாராத இந்தச் சந்திப்பு பயணத்தின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரித்தது.

சாப்பாட்டு நேரம் முடிவடைந்ததும் மீண்டும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். சுமார் இரண்டு மணித்தியாலப் பயணத்திற்குப் பின்னர் பொலன்னறுவையையும் சென்றடைந்தோம்.

நண்பர் அனோஜித் உடனே இறங்கிச் சென்று ATM இயந்திரத்தில் பணத்தை எடுத்துவந்து நடத்துநரிடம் கொடுத்தான்.

ஒருவழியாகப் பணப் பிரச்சினையும் முடிவுக்கு வந்தது!

அதன்பிறகு எங்களது பயணம் தொடர்ந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்றது.

இறுதியில் மட்டக்களப்பைச் சென்றடைந்து பேருந்திலிருந்து இறங்கினோம். அங்கே எதிர்பாராத விதமாகச் சந்தித்த நண்பன் சுரேனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்களது பயணத்தை நிறைவு செய்தோம்.

சில பயணங்கள் இலக்கை அடைவதற்காக மட்டுமல்ல; வழியில் சந்திக்கும் மனிதர்களும், நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நகைச்சுவையான தருணங்களும்தான் அவற்றை மறக்க முடியாத நினைவுகளாக மாற்றுகின்றன!

தொடரும்...!

விருப்பம் 2
107 வாசிப்புகள் ·

புகாரளி

ஏதாவது புகாரளிக்க உள்நுழையுங்கள் — அது புகார்களை உண்மையாக வைக்கிறது. நீங்கள் புகாரளிக்கும் நபருக்கு நீங்கள் யார் என்று தெரியாது.

கருத்துகள்

உள்நுழை கருத்துத் தெரிவிக்க.

ஒப்பிடு